தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை தடை செய்யக் கோருகின்ற வழக்கை சிறப்பு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மொய்தீன் இப்ராகிம், ஜி.பிரபு மற்றும் ஒப்பந்ததாரர் விக்டர், தமிழ் இலக்கியவாதியும் மென்பொருள் பொறியாளருமான கே.வி.எஸ். கண்ணன் ஆகியோர் கூட்டாக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். பெண் தெய்வமான ஆண்டாளின் புனிதத்தன்மையை பாதிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து கட்டுரையை வெளியிட்டிருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் செய்தித்தாளில் பிரசுரமான சர்ச்சைக்குரிய கட்டுரையை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழுவை அமைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரக் கோரிய நீதிபதியிடம், அது கடினமானது என மனுதாரர் வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, மதரீதியான கருத்துகள் உணர்ச்சிப்பூர்வமானவை எனக் கூறிய தலைமை நீதிபதி, அதில் பிரச்சினை ஏற்படும்போது அவை தடுக்கப்பட வேண்டுமெனக் கூறி வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.