குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ட்ராம்பிற்கான தமிழர் என்ற புலம்பெயர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சமஸ்டி முறைமை ஆட்சியை கொண்டு வரும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் அதிகாரத்தில் அமர்த்தியதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இவ்வாறு மாற்றங்களைக் கொண்டு வருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுதிமொழி வழங்கியதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக சிங்களத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு ஒன்றிணைவு, சமஸ்டி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காது சிங்கள பௌத்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ட்ராம்பிற்கான தமிழர் என்ற புலம்பெயர் அமைப்பு குற்றம் சுமத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 2010ம் ஆண்டின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளதாகவும் அந்தக் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.