ஈராக்கின்; முன்னாள் ஜனாதிபதி; சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் என்பவரை தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்து ஈராக் அரசு அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள், அல்காய்தா, பாத் கட்சி போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கும் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் 60 பேரை தேடப்படும் குற்றவாளியாக நேற்றுமுன்தினம் அறிவித்த ஈராக் அரசு அவர்களின் பெயர் பட்டியலையும், புகைப்படத்தையும் வெளியிட்டது.
முதல் முறையாக இந்த பட்டியலை அறிவித்ததுடன் இன்டர்போல் உதவியையும் நாடியுள்ளது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ள தீவிரவாதிகளாவார்கள். இந்தநிலையில் தற்போது ஜோர்டானில் வசித்து வரும் சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஈராக் அரசு செயற்படுவதாகவும் இதற்கெதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தப்பட்டியலில் ஐஎஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது