குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பொன்னாலை – பருத்தித்துறை வீதியூடாக பயணிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 28 வருடகாலமாக பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்துக்கு இராணும தடை விதித்து இருந்தது.
அதனால் அப்பகுதி மக்கள் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் பயணம் செய்ய வேண்டிய பிரதேசத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்தனர்.
அதனால் குறித்த வீதியினை திறந்து விடுமாறு பொதுமக்கள் பல வருடங்களாக கோரி வருகின்றனர். அந்நிலையில் , கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி இன்றைய தினம் வீதி மக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் ஜனாதிபதி உறுதி அளித்ததன் பிரகாரம் இராணுவம் அன்றைய தினம் குறித்த வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடவில்லை.
மறுநாள் 6ஆம் திகதி வீதி திறப்பினை நிகழ்வாக நடாத்தி யாழ்.மாவட்ட இராணுவ தளபதி , யாழ்,மாவட்ட அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு (நேற்றைய தினம்) மக்கள் பாவனைக்காக வீதி திறந்து விடப்பட்டது.
அந்நிலையில் நேற்றைய தினம் மாலை குறித்த வீதியூடாக பயணத்தினை மேற்கொள்ள என சென்ற மக்களை வீதியால் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. தற்போது போக்குவரத்து சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், பொதுப் போக்குவரத்திற்கு, குறித்த வீதி அனுமதிக்கப்படவில்லை என கூறி மக்களை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.