முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் வரவேற் கின்றோம். அவரை எம்முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடுக்கின்றோம். அவரை நாம் எதிரியாக எப்பொழுதும் கருதியது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கருமத்தை நாட்டில் நிறைவேற்றுவதற்கு அவரது ஒத்துழைப்பு தேவை. இந்த ஒத்துழைப்பை அவர் நல்கவேண்டும் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரை அழைத்து தனது இல்லத்தில் நேற்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்துரையாடினார். இதன்போது ஊடாகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது தேசிய அரசாங்கத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி ராபக்ஷவுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தேசிய அரசாங்கமானது தனது கொள்கையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பணிகளை தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக புதிய அரசியல் சாசன உருவாக்கத்தை தேசிய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ராஜபக்ஷவின் அனுமதியை பெற்று தேசிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் ஆனது கணிசமான தூரம் பயணம் செய்துள்ளது. அது முடிவடையும் வரையில் எவ்வித மாற்றமும் ஏற்பட முடியாது.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவை நாம் வரவேற்கின்றோம். அவரை எம்முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடுகின்றோம். அவரை நாம் எதிரியாக எப்பொழுதும் கருதியது இல்லை. ஏலவே நான் பாராளுமன்றத்தில் பலதடவைகள் இதனைக் கூறியிருக்கின்றேன். நீங்கள் மதிப்பு பெற்ற தலைவன் என்றும், ஒரு நல்ல கருமத்தை நாட்டில் நிறைவேற்றுவதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என்றும், அந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்ளுகின்றேன்.
கரங்களைப் பலப்படுத்தியுள்ளது
உள்ளூராட்சி சபை தேர்தலில் வடகிழக்கில் நாங்கள் அடைந்த வெற்றி எங்கள் கரங்களைப பலப்படுத்தியுள்ளது. உங்கள் ஒத்துழைப்பை நீங்கள் நல்கவேண்டும். தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். தேசிய பிரச்சினையை தீர்ப்பேன் என்று அன்று வாக்குறுதி அளித்தீர்கள். சர்வதேசத்திற்கும், சர்வதேச தலைவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கும் அந்த வாக்குறுதிகளை நீங்கள் நல்கினீர்கள் ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. அவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற இனியவது நீங்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்
வடகிழக்கில் பலமான ஆட்சியும் அதிகாரமும் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் ஏனையவர்களுடனும், நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவ்வாறு இயங்குவதற்கு நான் ஒருபோதும் பின் நிற்கமாட்டேன். மக்கள் நலன் கருதியும், சேவை கருதியும் ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அதிகாரமுள்ள ஒரு ஆட்சியை அமைப்பதற்கு நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கையை எடுக்க நான் பின்நிற்க மாட்டேன். ஆனால் வடகிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதை கவனமாக கலந்து ஆலோசிக்க வேண்டும். எமது கொள்கைக்கு மாறாத கட்சிகளாக அவை இருக்கவேண்டும்.
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் மகிந்தவின் பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. அவரை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி 32வீதம் வாக்குகளையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி 13வீதம் வாக்குகளை பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட மகிந்தவிற்கு எதிரான கட்சிகள் 45 வீதம் வாக்குகளை பெற்றுள்ளன. ஜே.வி.பி 5வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை ரீதியில் 3வீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒப்பீட்டுப் பார்க்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன அவர்கள் 51வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்ஷ‘ ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் குறைந்தளவு வீதத்தையே பெற்றுள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். அம்முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். தேர்தல் முடிந்ததும் தாமதம் இல்லாமல் அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் நடைபெற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக இவ்வருட முடிவுக்குள் அது நிறைவு பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். இதற்கு இலங்கையில் உள்ள எல்லாக் கட்சிகளும், எல்லாத் தலைவர்களும், பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். நியாயமான நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகின்றோம். பிரிப்படாத நாட்டுக்குள், ஒன்றுப்பட்ட தேசத்திற்குள், அந்த தீர்வு அதிகாரப் பலன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் எவரையும் நாம் அரசியல் எதிரிகளாக பார்க்கவில்லை. எல்லோரையும் நாட்டின் தலைவர்களாக மதிக்கின்றோம். அவர்கள் உள்ளக சுய நிர்ணய அடிப்படையிலான ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நல்கவேண்டும் என்றே தமிழ் மக்கள் கோருகின்றார்கள். அவ்வாறான ஒரு தீர்வானது அர்த்தபுஷ்டி உள்ள தீர்வாக இருக்க வேண்டும். இக்கருத்துக்களை எலவே நாட்டிலுள்ள தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இத்தேர்தலில் பெருந்தொகையான இடங்களில் போட்டியிட்டது அனேகமான சபைகளில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மை பெறாத சபைகளில் கூட குறிப்பாக வடமாகாணத்தில் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் சமஷ்டி முறையிலான தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். அதையே அவர்கள் நீண்டகாலமாக கோரி வந்திருக்கிறார்கள். ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் கூட இக்கோரிக்கையே ஆதரிக்கின்றார்கள் என்பதே அறியப்பட்ட விடயம். ஆகையால் அர்த்தபுஷ்டி உள்ள ஒரு அரசியல் தீர்வை அரசு விரைவில் தரவேண்டும் என வடகிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
திருக்கோணமலை நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களை பெற்றுள்ளது. அதே போல் நகரமும் சூழலும் பிரதேச சபையில் 7 ஆசனங்களை பெற்றுள்ளது. இவ்விரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். அதே போன்றே வெருகல் பிரதேச சபையில் 6 ஆசனங்களை பெற்றுள்ளது. மூதூர் பிரதேச சபையில் 5 உறுப்பினர்களையும் குச்சவெளி பிரதேச சபையில் 3 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் இடத்திலும், தம்பலகாமம் பிரதேசத்தில் 2 ஆசனங்களையும், முதலிக்குளம் பிரதேசத்தில் 1 ஆசனமும், கிண்ணியா நகரசபையில் 1 ஆசனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்தில் 10 பிரதேச சபைகளில் நாம் போட்டியிட்ட போதும் 9 பிரதேச சபைகளில் நாங்கள் உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கந்தளாய் பிரதேச சபையில் அவ்வாறான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. திருக்கோணமலை மாவட்டத்தில் 3 சபைகளில் ஆட்சியமைக்கும் பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது மாத்திரமன்றி அதிகூடிய உறுப்பினர்களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். (வீரகேசரி)