ரோஹிங்கியா மக்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனவும் உண்மையில் ரோஹிங்கியா பிரச்சனை குறித்து சூகி முழுவதும் புரிந்து கொண்டாரா என தெரியவில்லை எனவும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அவர் ஹெலிகொப்டரில் சென்று நாங்கள் பார்த்ததை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் அவருடைய தலைமையில் நம்பிக்கை உள்ள போதும் இங்கு நடக்கும் பிரச்சனையை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மியான்மர் சென்றுள்ள பொரிஸ் ஜோன்சன் , ஆங் சாங் சூகியை சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற கொடூரத்தை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை எனவும் நூற்றுக்கணக்கான கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சரியான தலைமை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து மக்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமாத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு செல்வதற்கு பொரிஸ் ஜோன்சன் பங்களாதேஸ் சென்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசியதுடன் அங்குள்ள உள்ள அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்தித்திருந்தாh என்பது குறிப்பிடத்தக்கது.