விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சாந்தரூபனை, அவுஸ்ரேலியா எதிர்வரும் 22ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதியாக சென்ற சாந்தரூபன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின், கடற்புலிகளின் படகுகள் கட்டுமான பிரிவில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர். அவுஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சாந்தரூபன், தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தம்மை அகதியாக ஏற்குமாறு சாந்தரூபன் விடுத்திருந்த கோரிக்கையை அவுஸ்ரேலியா நிராகரித்திருந்தது.
இதனையடுத்து சாந்தரூபனை இலங்கைக்குநாடு கடத்தக் கூடாது அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐநா அகதிகள் ஆணையகம் அவுஸ்ரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அவுஸ்ரேலியா நிராகரித்துள்ளதனையடுத்து நாடுகடத்துவது குறித்த அறிவித்தலை அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் சாந்தரூபனிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிலையில் சாந்தரூபனை வரும் 22ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.