குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல உட்கட்டுமான அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு அந்தந்த திணைக்களத் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
உட்டுகட்டுமான அபிவிருத்தியின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு ஊடாக வீதிகள், பாலங்கள், பொதுக் கிணறுகள், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலனவை மக்கள் பாவனைக்கு விடப்பட்டு குறுகிய காலத்திலேயே அவற்றில் பாரிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. பொதுக் கிணறுகள் உள்ளிட்ட சில அபிவிருத்திப் பணிகள் மக்களின் பாவனைக்கு வழங்கும் முன்னரே அவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டுவிட்டன. முக்கியமாக சமீப காலத்தில் அமைக்கப்பட்ட பாலங்கள் பலவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலைமையிலேயே மக்கள் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளனர்.
குறித்த அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்து அவற்றின் தரம் குறித்து ஆராய்ந்து நிதி விடுவிப்புக்களை மேற்கொள்ளவேண்டிய அந்தந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பான திணைக்களங்களின் தலைவர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் பெரும்பாலனவர்கள் ஒப்பந்தகாரர்களிடம் கையூட்டாக பணத்தை பெற்றுவிட்டு அபிவிருத்தி பணிகளின் தரம் குறித்து அக்கறை காட்டாது ஒப்பந்தகாரர்களின் போக்கில் விட்டுவிடுவதனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கும் பொது மக்கள்
இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய மாவட்டச் செயலகமும், பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவும் இவை தொடர்பில் அக்கறையின்றி இருப்பது இந்த மோசமான நிலைமைக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டும் மக்கள் இதனால் பெருமளவில் அபிவிருத்திக்கு என செலவு செய்யப்படுகின்ற நிதி வீண் விரையமாகின்றது எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.