இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ள நிலையில், ரோகித ராஜபக்ச தமிழ் மொழியில் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார்.
கடந்த 6-ம் தேதி (பெப்ரவரி) ‘புதுவித படை ஒன்று கிளம்புது பாரு’ என்ற 3 நிமிடங்கள் 18 விநாடிகளைக் கொண்ட தமிழ் பாடலை தனது யூ ரியூப் இணைய பக்கத்தில் ரோகித ராஜபக்ச வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தமிழர்கள் இணைய வேண்டும் என்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாரிக்கப்பட்ட பாடலாக இது தோன்றினாலும், இலங்கையிலுள்ள தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பாடலின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாடல் காட்சிகள் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் பதிவு செய்துள்ளனர்.
இந்த பாடல் குறித்து ரோகித ராஜபக்ச தனது பேஸ்புக் பதிவில் கூறும்போது, நீண்ட நாட்களாக தமிழ் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். இப்பாடலில் தமிழ் மொழி உச்சரிப்பில் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக தன்னை கூறிக் கொள்ளும் ரோகித ராஜபக்ச பாடியுள்ள இந்த பாடல் தற்போது இலங்கையின் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை அல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ரோகித ராஜபக்ச பாடிய ‘மங்முல வெலா’ என்ற சிங்களப் பாடலை மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் 20.2.2016-ல் வெளியிட்டார். ‘என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய்’ என்ற அர்த்தத்தில் இந்த பாடலின் வரிகள் அனைத்தும் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் விதமாக அமைந்திருந்தன. இப்பாடல் வெளியிடப்பட்ட முதல் நாளே ஒரு லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்தது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 23.8.2016-ல் ‘நெருங்கி’ என்ற சிங்களப் பாடலை வெளியிட்டார். இதில் அவரது காதலியான டியானா லீயையும் நடிக்க வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.