குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மகிந்த ராஜபக்ச மனம் வருந்தி எமது உறவுகளை விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம் என லீலாதேவி தெரிவித்துள்ளார்
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இந்த ஜனாதிபதி காலத்தில் அதற்கு நீதி கேட்டு போராடி வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துரோகங்களுக்கும், தவறுகளுக்கும் மனம் வருந்தி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். எங்களுக்கு தேவை எங்களின் பிள்ளைகளே என கிளிநொச்சியில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் இணைப்பாளரான லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்
இன்று(17) சனிக்கிழமை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடத்தில் முன்னைய ஜனாதிபதிக்கும், தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை.
தற்போதைய நிலைமையில் நாம் போராடுகின்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளமை மட்டும்தான் வித்தியாசம். தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் எங்களின் உறவுகளை தேடுகின்ற போராட்டத்திற்கு நெருக்கடிகள் வரலாம் என்ற போதிலும் நாங்கள் எங்களின் உயிர்களை பணயம் வைத்தே போராடி வருகின்றோம்,
எங்களின் உயிர்களை தந்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தருவோம் என்றால் எங்கள் அம்மாக்கள் அனைவரும் தங்களின் உயிர்களை வழங்கிவிடத் தயாராகவே உள்ளனர்.
எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர். உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே உள்ளதாக எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடயத்;தில் எவ்வித மாற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது. இரண்டு ஜனாதிபதியும் எமது பிள்ளைகள் தொடர்பில் மாறுபட்ட கருத்தையே தெரிவிக்கின்றனர். எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். மாறாக அவர்களால் எமக்கு எவ்வித முடிவுகளையும் பெற்றுதர முடியாதுள்ளது
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்கின்ற சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்புக்கள் எமக்காக குரல் கொடுக்க வேண்டும். இனி நாம் சர்வதேசத்திடம்தான் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி பேராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளுரில் எமது போராட்டத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.
நாம் வீதி போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ம் திகதி ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதுவரை எமக்கு உதவிய அனைத்து சிவில் அமைப்புக்கள், பொது மக்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாம் பாரிய அளவிலான போராட்டம் ஒன்றை செய்து ஐநாவிற்கு கேட்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.
இதற்கு ஒத்துழைக்கும் வகையில் அனைத்து வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களினுடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம். அன்றய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம் எனவும் தெரிவித்தார்