இந்த மருத்துவ நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அவர்களே, இங்கே வருகை தந்திருக்கின்ற வைத்திய கலாநிதிகளே, மருத்துவத்துறை அதிகாரிகளே, இந்த மருத்துவ நிலையத்தின் நிரந்தர மருத்துவர் அவர்களே, கோப்பாய் பிரதேச செயலர் அவர்களே, இங்கே பணியாற்றும் அனைத்துத்தர மருத்துவ உதவியாளர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
கடந்த 07 வருடங்களாக இப் பகுதியில் இயங்கி வருகின்ற பிள்ளையார் மெடி கிளினிக் என்ற இந்த வைத்திய மற்றும் வைத்திய ஆலோசனை நிறுவனம் புனரமைப்புச் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படும் இத் தருணத்தில் உங்கள் முன் மிகச்சுருக்கமாக உரையாற்ற விழைகின்றேன்.
பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் தனிப்பட்ட ஒரு மருத்துவமற்றும் மருத்துவ ஆலோசனை நிறுவனத்தை திறந்து வைப்பதற்காக நான் இங்கே வந்திருக்கின்றேன் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. மருத்துவத் துறையில் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உடனடி வைத்திய உதவிகள் கிடைக்காமை,முறையான வைத்தியப் பரிசோதனைகள் மூலம் அவர்களின் நோயின் தன்மை அறியப்படாமை போன்ற காரணங்களால் பல இன்னுயிர்கள் இழக்கப்பட்டு வருகின்றன. துன்பகரமான இவ்வாறான நிகழ்வுகள் எம்மைத் தினமும் துயரத்தில் ஆழ்த்துகின்றதால்அதனை மனத்தில் இருத்தியே எனது இன்றைய வருகை அமைந்திருக்கின்றது. முறையான மருத்துவ நிலையங்களின் தேவை இன்று பெருகியுள்ளது எனலாம்.
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தமக்கு உரிய வைத்திய உதவிகளை வெளிநோயாளர் பிரிவில் பெற்றுச் செல்கின்றார்கள். அதற்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்று வெளியேறுகின்றார்கள். இருந்தும் பல நோயாளர்கள் அல்லது விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொதுவாக மருத்துவர்கள் இரவு பகலாக கண் துஞ்சாது மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. மாறாக வைத்திய அதிகாரிகள் பிரத்தியேக வைத்தியசாலைகளில் பணம் சம்பாதிக்கின்றார்கள். இலவச மருத்துவ மனைகளில் அவர்களின் சேவைகள் திருப்திகரமாகக் கிடைக்கப்பெறுவதில்லை என்ற ஒரு கருத்தே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது என்று கருதுகின்றேன். வைத்திய நிபுணர்கள் பிரத்தியேக வைத்தியசாலைகளுக்கு செல்வது உண்மை. சில வைத்தியர்கள் நோயாளிகள் மீது போதிய கரிசனை காட்டாது இருக்கலாம். ஆனால் அவர்கள் தமது கடமைகளுக்கு மேலதிகமான நேரங்களிலேயே இவ்வாறான விசேட கடமைகளை ஆற்றி வருகின்றார்கள். இலவச மருத்துவமனைகளில் அவர்களின் சேவைகளை நான் நேரடியாகப் பெற்றவன். அவற்றினால் பயன் பெற்றவன். அந்த வகையில் அவர்களுக்கு எனது அங்கீகாரத்தை வழங்குவதில் எனக்குத் தயக்கமில்லை.எம்முட் பலர் களியாட்ட நிகழ்வுகளிலும் உணவு விடுதிகளிலும் பொழுதுகளைக் கழிக்கின்ற போது வைத்திய நிபுணர்கள் இரவு பகலாக நோயாளிகளை கவனிப்பதிலும் அவர்களுக்குரிய மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் முழு நேரத்தையும் செலவிடுகின்றார்கள். இதை நாம் மறத்தலாகாது. இன்று தனியார் – பொதுமக்கள் கூட்டு வணிகம் சிபார்சு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தனியார் -பொதுமக்கள் மருத்துவ உடன்பாடானது ஒன்றையொன்று குறைநிரப்புவதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
பிரத்தியேக வைத்திய நிலையங்கள் உருவாக்கப்படுவதன் மூலமாக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாத அல்லது உடனடி வைத்திய உதவிகள் தேவைப்படுகின்றவர்கள் உதாரணமாக குழந்தைகளுக்கான வைத்திய உதவிகள் உடனே தேவைப்படுகின்றவர்கள் விரைவாக தமது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான வைத்திய நிலையங்கள் பெரிதும் உதவி புரிவன. அண்மையில் ஒருவருடன் உரையாடுகின்ற போது அவர் ஒரு விடயத்தைத் தெரிவித்தார். அவரின் பேரக்குழந்தைக்கு வைத்திய ஆலோசனைகளை வழங்குகின்ற வைத்திய நிபுணர் தமது பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தைஅவருக்கு வழங்கியிருந்ததாகவும் நடுச்சாமத்தில்கூட பிள்ளையின் நோய் பற்றி அந்த வைத்திய நிபுணருக்குத் தொலைபேசி மூலமாக தெரிவிக்கின்ற போது தன்னிடம்என்னென்ன மருந்துகள் இருக்கின்றன என அறிந்து கொண்டு அதில் என்னென்ன மருந்துகளை என்;ன அளவில் கொடுக்க வேண்டும் என்பதை,அடுத்த நாள் குழந்தையை வைத்திய நிபுணரிடம் எடுத்துச் செல்லும் வரை, தொலைபேசி மூலமாகஅவரின் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டதாகவுந் தெரிவித்தார். இவ்வாறான வசதிகள் வேறு எங்கே கிடைக்கப்போகின்றது? ஏனைய மருத்துவ நிபுணர்கள் கூட தொலைதூரத்திருந்து வருகின்ற நோயாளர்களுக்கு தமது தொலைபேசி இலக்கங்களை கொடுத்து வைத்திருக்கின்றார்கள் என்பதுந் தெரிய வந்தது. இவ்வாறான மருத்துவர் – நோயாளர் உறவு நான் முன்னர் கூறிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்தலைக் கட்டுப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் ஒரு சில தவறுகள் பிரத்தியேக வைத்திய நிலையங்களில் ஏற்பட்டிருப்பது அல்லது ஏற்படக்கூடிய சூழல்கள் காணப்படுவது மனவருத்தத்திற்குரியது. வைத்திய நிபுணர்களும் ஏனைய வைத்திய அதிகாரிகளும் சிறப்பாக பணிகளில் ஈடுபடுகின்ற போதும் பிரத்தியேக வைத்திய நிலையங்களின் முகாமைத்துவப் பீடங்களின் கவனக்குறைவுகள் அல்லது பணம் மீட்டுதலே ஒரேயொரு குறிக்கோள் என்ற அவர்களின் மனோபாவம் தவறுகள் நடைபெற இடமளித்து விடுகின்றன. தவறான மருந்து விநியோகம், பயிற்சியற்ற தாதியர்களை, பணியாளர்களை வேலைக்கமர்த்தல் போன்றவை நோயாளிகளை நிரந்தர ஊனர்களாக மாற்றிவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
எனவே பிரத்தியேக மருத்துவ மனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடாத்துகின்ற அனைத்து முகாமைத்துவங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுதலை இச் சந்தர்ப்பத்தில் விடுக்கலாம் என எண்ணுகின்றேன். உங்கள் கவனக்குறைவுகள் அல்லது பிழையான மருந்துப் பாவனைகள் அல்லது பயிற்சியற்ற அலுவலர்களை நியமித்தல் ஆகியன பல நோயாளர்களுக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்த வழி அமைக்கின்றன. வைத்திய நிபுணர்களுக்கும் அது அவப்பெயரைத் தேடித்தருகின்றது. ஆகையால் உங்கள் மருத்துவ மனைகளின் சுத்தம், சுகாதாரம், தொற்று நீக்கிகளை உறுதிப்படுத்தல் போன்றவை100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உங்கள் மருத்துவ நிலையங்களில் வழங்கப்படுகின்ற மருந்து வகைகள் வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்ட சரியான மருந்து வகையாக இருக்கின்றதா என்பதும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் சகல மருந்து விநியோகங்களும் தகுதி வாய்ந்த அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்களாலேயே விநியோகிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியாகப் பயிற்சிபெற்ற தாதியர், மருத்துவப் பணியாளர்கள் போன்றோர் சேவையில் அமர்த்தப்பட வேண்டும். தகுந்த தாதியர் குறைபாடு தொடர்ந்து இருந்து வருகின்றது. இதனால் எமது பொது வைத்தியசாலைகள் வெளி மாகாணங்களில் இருந்தே தாதிமாரை வரவழைக்க வேண்டியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தேர்ச்சித்தர சான்றிதழ்களைப் பெறாத தாதியர் வேலைக்கு அமர்த்தப்படுவதைத் தடுக்க வேண்டும். படித்த பெண்களிடையே வேலையின்மை இருந்து வருகின்றது. ஆனால் தாதியராகப் பதவி ஏற்க எம் பெண்கள் முன்வருகின்றார்கள் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.தாதியரின் கடமைகள் நோயகற்றும் புனிதக் கடமை என்பதை எம் இளம் சகோதரிகள் உணர வேண்டும். பிள்ளையார் மெடி கிளினிக் தொழிற்திறனுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. உங்கள் பொறுப்புக்கள் முறையாக செயற்படுத்தப்படாத போது இன்று இந்த மருத்துவ நிலையத்தைத் திறப்பதற்கு எவ்வாறு எமது மனமுவந்த ஆதரவை வழங்கியுள்ளோமோ அதேயளவு ஆதரவு குறிப்பிட்ட மருத்துவ மனையை மூடவும் வழங்கப்பட வேண்டிவரும் என்ற செய்தியையும் இத்தருணத்தில் தெரிவித்து, பொது மருத்துவ மனைகளோ அல்லது பிரத்தியேக மருத்துவ மனைகளோ அதிகம் இல்லாத இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பிள்ளையார் மெடி கிளினிக் வைத்திய நிறுவனம் சிறந்த ஒரு சேவையை 24 மணிநேரமும் வழங்கிவர வாழ்த்தி எனது வாழ்த்துரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
பிள்ளையார் மெடி கிளினிக்
திறப்புவிழா
ஆவரங்கால் கிழக்கு, ஆவரங்கால், புத்தூர்.
17.02.2018 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில்
பிரதம அதிதியுரை