தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். விக்ரம் வேதா, இவன் தந்திரன், ரிச்சி ஆகிய படங்களில் நடித்த ஸ்ரத்தா கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்தநிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
தனது தந்தை ஒரு ராணுவ அதிகாரி எனவும் அம்மா ஆசிரியை எனவும் தான் சட்டம் படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கல்லூரியில் படித்தபோதே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சினிமா கவர்ச்சியான உலகம் என்பதனால் பெற்றோர் பயந்தனர் எனவும் பின்னர் அவர்களை சம்மதிக்க வைத்து நடிக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள் எனவும் அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க கிடைத்தமையை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் என்பதனால் தனக்கு தலைக்கனம் கிடையாது எனவும் தமிழக ரசிகர்கள் என்னை தமிழ் பெண் மாதிரி பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது லட்சிய கதாபாத்திரம் என்பது ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது. யாராவது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்து முதல்-அமைச்சராகி உயர்ந்த இடத்துக்கு சென்றவர் அவர். அவரது வாழ்க்கையும், சாதனைகளும் தனக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது எனவும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.