150
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய கால அவகாசத்தை நிறுத்துமாறு தாங்கள் வலியுறுத்திவரும் நிலையில் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தமையானது மேலும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதற்கான வாய்ப்பினையே வலியுறுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று (17.02.2018) ஊடகவியலாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
“ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தார். அங்கு உரையாற்றிய சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி, இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு, அனைத்துலக சமூகம் .இடமளிக்கக் கூடாது என்றும், ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.
இந்த விடயத்தை மேலோட்டமாகப் பார்க்கின்றபொழுது ஏதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த எட்டு வருடங்களாக அரசாங்கத்தைக் காப்பாற்றுகின்ற நிலையில் இருந்து விலகி தேர்தலுக்குப் பின் திருந்திவிட்டது போன்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தையே காட்டுகின்றது.
ஆனால் அவர் ஜெனீவாவில் கூறிய கருத்துக்களின் ஆழமான உள்ளடக்கத்தை நாங்கள் பார்க்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்தமையாலேயே கடந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் தேர்தல் முடிந்து அடுத்த வாரத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டது.
தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின்போது தமக்கு ஆணை வழங்காவிட்டால் அது மகிந்த ராஜபக்சவை பலப்படுத்தும் என கூறிவந்த சுமந்திரன் இன்று அதே மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளார்.
30/1 தீர்மானம் மிகத் தெளிவாக உள்ளக விசாரணையை வலியுறுத்தியிருக்கின்றது. குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் ஜ.நா ஆணையாளர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையில் இலங்கையின் நீதித்துறை அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் அந்தவகையில் உள்ளக விசாரணை சரிவராது எனவும் ஆகக் குறைந்த பட்சம் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
எனினும் உறுப்புநாடுகள் இணைந்து 30/1 தீர்மானத்தினூடாக உள்ளக விசாரணையினைக் கோரின. ஆணையாளரின் அறிக்கைக்கும் 30/1 தீர்மானத்துக்கும் இடையிலான பேறுபாட்டைச் சுட்டிக்காட்டியே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இது உள்ளகவிசாரணையே என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திவந்தது.
தற்போது ஜ.நா மனித உரிமைகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக 30/1 தீர்மானத்தை ஆதரித்த பல நாடுகளில் பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிடம் நீங்கள் இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையினை நடைமுறைப்படுத்தப்பேவதில்லை என உறுதியாகக் கூறிவருவதைச் சுட்டிக்காட்டியபோது அவர்கள் எம்மிடம் குறித்த தீர்மானத்தில் கலப்புப் பொறிமுறை பற்றியே இல்லை எனக் கூறினர். எனவே மிகத் தெளிவாக குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகள் கூட இது கலப்பு பொறிமுறையை வலியுறுத்தவில்லை என ஒப்புக்கொண்டிருக்கின்ற நிலையில் உள்ளக விசாரணையினை வலியுறுத்துகின்ற 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு கேட்பதென்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்” – என்றார்.
Spread the love