குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…
மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்தேவானந்தா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.ஆளும் அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ் மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளளுராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டக்ளஸ்தேவானந்தா பல சபைகளில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களின் அடிப்படையில் மக்களின் நலன் அடிப்படையில வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என தான் கூறியதாக தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தமை கூட்டமைப்புடன் இணைவது அல்லது கூட்டமைப்பை ஆதரிப்பது என்ற பொருள்படாது எனக் கூறிய அவர், மக்களின் நலன் அடிப்படையில் சபைகளின் இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமை என்ற முனைப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
எனினும் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மாநகரசபையில் ஆட்சியுரிமை கோரவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கட்சியினுள் விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் டக்ளஸ்தேவானந்தா குளோபல் தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவித்தார். குறிப்பாக கூட்டமைப்பினர் ஆனோல்டை மேயராக்க முனைவதனை தமது கட்சியின் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை என்ற நிலையில் தமது உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிப்பதா? அல்லது கட்சி எடுக்கும் தீரமானத்திற்கு கட்டுப்படுவதா என்ற முடிவுக்கு வரவில்லை என டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.