உலக தாய்மொழிகள் தினம் வருடா வருடம் பெப்ரவரி 21ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. பங்களா மொழிப் போராட்டத்தில் மரணித்த பங்களாதேசத்து மொழிப் போராளிகள் நினைவாக யுனெஸ்கோவின் பிரகடனத்தின்படி இத்தினம் பெப்ரவரி 21, 1999 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்களாதேசத்தின் தலைநகரான டாக்கா இத்தினத்தில் மிகப்பெரும் சமூகப் பண்பாட்டுத் திருவிழாச் சூழலாக மக்களால் நிறைந்திருக்கும். அதிகாலை முதல் மொழிப் போராட்டத்தில் மரணித்த மொழிப் போராளிகளின் நினைவுத்தூபியின் சுற்றுப்புறங்கள் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கும். நினைவுத்தூபி ‘ அலங்காரங்களால் பொலிந்திருக்கும். அத்தினத்திற்கே உரிய ஆடைகளை அணிந்து மக்கள் சாரிசாரியாக நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்த வந்துகொண்டிருப்பர்.
பெப்பரவரி 21ம் திகதிக்கு முன்னும் பின்னுமாக கலைத் திருவிழாக்களால் டாக்கா நகரம் பொலிவுபெற்றிருக்கும். பங்களா மொழி புத்தகத் திருவிழா, திரைப்படவிழா, சிற்ப, ஓவியக் காட்சிப்படுத்தல்கள் மொழிப் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவுப் பொருட்கள், பாடல்கள், ஆடல்கள், முக்கியமாகக் கவிதை மொழிதல்கள், கலை இலக்கிய, சமூக, பண்பாடு சார்ந்த உரையாடல்களின் கலைப் ‘ங்காவனமாக டாக்கா நகரம் அறிவுத் தேட்டத்தில் திளைத்திருக்கும். இவ்வாறே உலகம் முழுவதும் வௌ;வேறு அளவுகளில் உலக தாய்மொழிகள் தினம் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் இலங்கையிலும் உலக தாய்மொழிகள்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது. குறிப்பாக மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினர், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் என்பன தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட வகையிலும் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
குறிப்பாக எண்ணிக்கையில் குறைந்தளவிலரான சமூகங்களின் மொழிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொண்டு மேற்படி மொழிகளை புளக்கத்தில் வைத்திருப்பதற்கும், மீளப் புளக்கத்திற்குக் கொண்டுவரும் வகையிலான முன்னெடுப்புகளுக்கான தொடர் செயற்பாடுகளை உலக தாய்மொழி தினத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகின்றமை நடைமுறையில் இருந்துவருகின்றது.
தாய்மொழி வளத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துவருகின்ற பல்வேறு துறைசார் ஆளுமைகளை வாழ்த்துவதும் குறிப்பாகப் பாரம்பரியமாக மருத்துவமும், மாந்திரிகம், வேளாண்மை மற்றும் தொழிநுட்பம் உட்பட்ட கலை, பண்பாட்டுத்துறைகளின் துறைசார், ஆளுமைகளின் புலமைத்துவ பரிமாணங்கள் அறிந்தும் உணர்ந்தும் கொள்ளும் வகைசெய்தல் முக்கியமான பணியாக முன்னெடுக்கப்படுகின்றது. மேற்படி ஆளுமைகளையும் சிறுவர் மற்றும் இளையர் குழாங்களை உரையாடலுக்கு ஒன்றிணைப்பதின் மூலமாக அறிவூட்டத் தொடர்ச்சியை வலுப்படுத்துவதுமான செயற்பாடுகள் உலக தாய்மொழி தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலக தாய்மொழி தினம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை பரவலாக்கம் செய்வது ஆற்றுகைகள் மற்றும் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழி நிகழ்த்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் பெப்பரவரி 21, 2018ஐ மொழிபெயர்ப்புக் கலையை முக்கியத்துவப்படுத்தும் தினமாக நாங்கள் வடிவமைத்திருக்கின்றோம்.
தமிழ்மொழி மிகப்பெரும்பாலும் ஆங்கிலமொழி வழியாகவே உலகத்தைப் பார்த்து வந்திருக்கிறது. ஆயினும் போரும் புலம்பெயர்வும் ஆக்க’ர்வமான ஒரு நிலைமையையும் ஈழத்தமிழர் வழி தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து நேரடியாகவே தமிழுக்கு விடயங்கள் மொழிபெயர்க்கப்படுவது நிகழ்ந்து வருகின்றது. இதன் அளவு சிறியதெனினும் அதன் கீர்த்தி மிகப்பெரியது.
ஆங்கில மொழிவழி கட்டமைக்கப்படும் உலக நோக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு யதார்த்தமான பலநோக்கு நிலைகளில் உலகை அறிவதற்கும் அறிவிப்பதற்குமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இது தன்னார்வத்தில் இயங்கும் தனியாட்கள், சிறுகுழுக்கள், சிறுபத்திரிகைகள், நூல்வெளியீடுகள் என ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் உணரப்படாத அறிவுச் சமூகத்தில் தன்னார்வம் காரணமாக இயங்கிவரும் மொழிபெயர்ப்பாளரின் முக்கியத்துவத்தை உணரும் வகையிலும், உணர்த்தும் வகையிலும் உலக தாய்மொழிகள் தினம் பெப்ரவரி 21, 2018 வடிவம் பெற்றிருக்கின்றது.
மொழிபெயர்ப்பில் இரண்டு வகையிலானவர் உண்டு. எழுத்து வழி மொழிபெயர்ப்பு, பேச்சுவழி மொழிபெயர்ப்பு என்ற இந்த இரண்டு வகையும் கொண்டிருக்க வேண்டிய ஆற்றல் அளப்பரியது. இந்த அளப்பரிய ஆற்றல் கொண்ட கலையும் அறிவும் இணைந்த ஆளுமைகள் அறியப்படுவதும், மதிக்கப்படுவதும் மொழிபெயர்ப்பின்வழி தமிழ் மொழி அறிவு வளத்தையும் ஆக்கத்திறத்தையும் பெருக்குவதன் பாற்பட்டதாகும்.
உலகத்தை அதன் இயல்பான பல்வகைத் தன்மையுடன் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கும் தமிழ்ச் சமூகம் அதனை அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்கும் வகை செய்வதன் நோக்காக தமிழுக்கு மொழிபெயர்த்தல் கொண்டாடப்படுகிறது.
இன்றைய காலத்தையும் எதிர்காலத்தையும் வரவேற்கும் தமிழ்மொழி : உலகத் தாய்மொழிகள் தினத்தை முன்னிறுத்தியொரு சிந்தனை
உலகத் தாய்மொழிகள் தினம் பெப்ரவரி 21ம் திகதி கொண்டாடப்பபடுகின்றது. பங்களா மொழிப் போராட்டத்தில் மரணித்த மொழிப் போராளிகள் நினைவாக பங்களாதேச மக்களதும் அரசினதும் முன்னெடுப்பின் காரணமாக யுனெஸ்கோவின் பிரகடனத்தின்படி உலக தாய்மொழிகள் தினம் வருடா வருடம் பெப்ரவரி 21ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுகளுக்கான நண்பர்கள் குழுவினர் வருடந்தோறும் இத்தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில்; இந்த வருடம் மொழிபெயர்ப்புக் கலை கவனத்திற்கெடுக்கப்படுகின்றது. உலகின் பல்வேறு மொழிகளில் இருந்தும் தமிழுக்கு நேரடியாகவே அறிவையும் திறனையும் கொண்டுவரும் நிலைமைகள் தன்னார்வச் செயற்பாடுகளினால் துளிர்விட்டு வளர்ந்து வருகின்றன.
இச்சூழ்நிலையில் உலகத்தின் பல்வேறு மொழிகளிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கும் கலையின் தேவையையும் அதனை வலுப்படுத்துவதற்கான வழிவகையையும் உரையாடலுக்குக் கொண்டுவருவதும்; மேற்படி துறையில் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கும் முன்னோடி ஆளுமைகள்;, உழைத்துவரும் சமகால ஆளுமைகளது ஆற்றல்களும், அர்ப்பணிப்புகளும் மாண்பு செய்யப்படுவதும், மதிப்பீடு செய்யப்படுவதும் மிகவும் அவசியமாகின்றது.
இணையம் என்னும் தொழில்நுட்ப வளம் தமிழில் வாய்த்திருக்கும் அருமையான சூழலில் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் இணையவழி தங்கள் பல்துறை அறிவை தமிழில் பெருக்குவதும்;; பல்வேறு மொழிகள் சுமந்துவரும் பல்துறை அறிவையும் தமிழுக்கு மடைமாற்றம் செய்வதும் தமிழ் மொழியின்வழி இன்றைய காலத்தையும் எதிர்காலத்தையும் வரவேற்றுக் கொள்ளும் அற்புதமான வழிமுறையாக அமையும்.
மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்தலுக்கான உன்னத எதிர்பார்ப்பு
பரம்பரை பரம்பரையாகப் பட்டறிவூடாக வரித்கொண்ட அனுபவ அறிவும்; வாய்மொழி வழியிலான அறிவுப் பகிர்வும் பெருக்கமும் விஞ்ஞானபூர்வமற்றது எனக் கற்றுத்தரப்பட்டதன் வழி கேள்வியேதுமற்றது பாமரத்தனம் என ஏற்று நிராகரித்து வாழ்ந்து வரும் சமூகங்கள் மேற்படி அறிவுமுறைகளை கல்வி, கேள்விக்குட்படுத்தி மீளக்கொண்டு வருவது நிலைநிற்கும் சமூகப் பண்பாட்டு, பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புடையது.
இன்றுவரையில் உள்ளுர் அறிவு திறன் முறைமைகள் நவீன கல்வி முறைமைகளுக்குள் கொள்ளப்படாதவை ஆகவும் தகாதவை ஆகவுமே கணிக்கவும் கையாளவும்பட்டு வருகின்றன. இலக்கியம் தொட்டு மருத்துவம் வரையிலாக இந்த நிலைமையே காணப்பட்டு வருகின்றமை கவனத்திற்குரியது.
தங்களுக்குரிய பாடவிதானங்களை வரைவு செய்துகொள்ளும் சுயாதீனம் கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த விடயம் சார்ந்து எடுத்துக்கொண்ட முயற்சிகள் கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியவை.
உள்ளுர் அறிவுதிறன் சார்ந்த அறிவுமுறைமைகளுடன் சார்ந்த அறிஞர்களையும் கலைஞர்களையும் உயர்கல்வி முறைமைக்குள் உள்வாங்கப்படுவதன் முக்கியத்துவம் அறியப்படுவதும் உணரப்படுவதும் மிகவும் அவசியமாகின்றது.
பாரம்பரிய வைத்தியர்கள், பல்வகைத் தொழிற்துறைசார் தொழிநுட்ப நிபுணர்கள், வேளாண் அறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள், ‘சாரிகள், அண்ணாவிமார், மாந்திரிகர்கள், மருத்துவிச்சிகள், கதைசொல்லிகள், கலிபாடிகள், உணவு தயாரிப்பு நிபுணர்கள், மூலிகை நிபுணர்கள், கலை, கைவினைக் கலைஞர்கள் என இப்பட்டியல் விரிந்து செல்லும்.
இந்த அறிவு முறைகள் உயர்கல்வி மரபுக்குள் உள்வாங்கப்படுவதும்; இக்கல்வி முறைகள் பற்றிய அறிமுகத்தையும் அறிவையும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி மரபுக்குள் கொண்டு வருவதும் சூழல்நட்புக் கொண்டதும், பொருளாதாரத்தில் தங்கிநிற்றல் நிலை நீக்கம் பெற்றதும் மக்கள் மயப்பட்டதுமான சமூக உருவாக்கங்களுடன் தொடர்புடையது என்பதும் உரையாடல்கள் மூலமான முன்னெடுப்புக்களுக்குரியன.
மேற்படி அறிவுமுறைமைகள் வாய்மொழி மூலமான அனுபவ அறிவுப் பகிர்வுக்கு உரியதாகவும் ஏடுகளில் எழுதப்பெற்று பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வருபவையாகவும் மிகப் பெரும்பாலும் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்படி அறிவுமுறைகளைக் கையாளுவதற்கு அவசியமான அறிவும பயில்வும் தேவைப்படுகின்றது. வாய்மொழி அறிவு திறன்களை அறிந்து பதிவு செய்து புதிய ஊடகங்களுக்கு கொண்டு வருதல்; கிரகித்தலையும், நினைவில் வைத்தலையும் அடிப்படையாகக் கொண்ட அறிவுமுறைப் பயில்வு என்பன இங்கு அவசியமாகின்றன.
மேலும் ஏடுகளைப் பேணுகின்ற, பராமரிக்கின்ற அறிவுதிறனும், ஏடுகளை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு கொண்டு வருகின்ற அறிவு திறனும் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.
முதல் மொழிகளில் அதாவது தாய்மொழி மூலமாக அமையும் கல்வி முறைமையே முழுமையான கல்வித்திறத்தையும், தரத்தையும் வெளிக்கொண்டுவரவல்லது என்பது உலகறிந்த அறிவியல் முடிவு. எனவே முதல் மொழியில் அமைந்த கல்விமுறைமை என்பதம் உள்ளுர் அறிவுதிறன் முறைமைகளை உள்வாங்கிய கல்விமுறை என்பதும் பற்றிய உரையாடல், உள்வாங்கல், முன்னெடுத்தலின் அவசியம் உணரப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
உலகின் பல்வேறு அறிவு முறைமைகளையும் அந்தந்த மொழிகளுடாகவே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்ற தமிழர் சமூகங்கள் மேற்படி விடயம் சார்ந்து சிந்திப்பதும் செயற்படுவதும்; மேற்படி முன்னெடுப்புக்களுடன் உலகின் பல்வேறு சமூகங்களுடனும் தொடர்புகொண்டு இயங்குவதம் மனிதர்களை மனிதர்களுடனும், இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவுச் செயற்பாடாக அமையும் என்பது உன்னத எதிர்பார்ப்பு. இது சமூக ஜீவியுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளின் அடிப்படை.
கலாநிதி சி. ஜெயசங்கர்.