குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். இந்த நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணக் காவல்துறையினர்; மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமனறம் பிணை வழங்கியது.
இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி மாணவர்களின் கொலைக்கு விரைவாக நீதி வழங்கப்படவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வலியுறுத்தியிருந்தனர்.
மூன்று மாதங்களுக்குள் நீதி பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி மாணவர்களிடம் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.