ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷிட் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். அண்மைக்காலமாக ரஷிட் கான் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. இந்த ஐந்து போட்டிகளிலும் ரஷிட் கான் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இதேபோல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இதனால் இருவரும் ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷிட் கான் 19 வயது 153 நாட்களில் முதலிடத்தை பிடித்துள்ளதன்மூலம் மிக இளம் வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.