குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சென்றுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தசந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்த சம்பந்தன் புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்தநிலையில் அரசியல் சாசனத்தை உருவாக்கும் முனைப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அரசியல் சாசனத்திற்கு மக்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் .மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
1.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வலு குறைந்த தீர்மானங்களை சம்பந்தர் ஏற்றபடியால் வலுவான தீர்மானங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணை கிடைக்கவில்லை.
2.இலங்கை அரசாங்கத்தின் மீது உள்ள அழுத்தத்தை அகற்ற சம்பந்தர் உதவி செய்தபடியால் அழுத்தம் அற்ற நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களை அமுல்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.
3.அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பு கலந்து கொள்வதை நிராகரித்த சம்பந்தர் இப்பொழுது தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்.
4.சம்பந்தரின் விவேகமற்ற செயல்களால் இனப்பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வாய்ப்புகளை தமிழர்கள் இழந்துள்ளார்கள்.