வெறுமனே கட்டடங்களை மட்டும் உருவாக்குவதன் மூலம் மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கிவிட முடியாது. மாறாக இம் மருத்துவ மனைகளில் சேவையாற்றுவதற்கு கூடுதலான மருத்துவர்கள்,தாதியர் போன்றோர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் புகுயுவுஆ திட்ட உதவியுடன் சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
வருடா வருடம் பல நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் உருவாக்கி வருகின்ற போதும் இவ்வாறான மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும்.
பல்கலைக்கழகங்களிலிருந்து வருடா வருடம் வெளியேறுகின்ற மருத்துவர்களில்; கூடுதலானவர்கள் மேலதிகப் படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளை நோக்கி சென்று விடுகின்றார்கள். திரும்பி வருபவர்கள் மிகச் சிலரே. இதனால் பின் தங்கிய பகுதிகளிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒரு நிரந்தர வைத்தியர் கூட இல்லாத நிலையில் வருகைதரும் வைத்திய நிபுணர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் அவை இயங்கி வருவது மனதிற்கு வேதனையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் எத்தனையோ வைத்திய நிபுணர்கள் அவர்களின் திறமை அடிப்படையில் மேலை நாடுகளுக்கு சேவை புரிவதற்காக அழைக்கப்பட்ட போதும் அவர்கள் அந்த அழைப்புக்களை நிராகரித்து தமது மண்ணில் இங்குள்ள உறவுகளுக்கு மருத்துவ சேவைகளை இரவு பகல் கண் துஞ்சாது ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் அளப்பரும் சேவைகளை இத் தருணத்தில் நன்றியறிதலுடன் பாராட்டுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அறையில் இருந்து வேலை முடிந்து வெளியேறும் போது அந்த அறையின் மின்விளக்கு, மின்விசிறி,குளிரூட்டிகள் ஆகியவற்றை நிறுத்தாது அப்படியே விட்டுச்செல்லல், அரச வாகனங்களை சீரான பராமரிப்பின்றி இரவு பகல் என தொடர்ந்து பாவித்து அவற்றைப் பழுதடையச் செய்தல், அரசகட்டடங்களை அழுக்காக்குதல், கழிப்பறைகளை முறையாக நீரூற்றி சுத்தம் செய்யாது விடுதல் போன்ற தவறான பழக்கங்கள் எம்மிடம் உண்டு. அதே நேரம் எமது சொந்த வீட்டில் இவை அனைத்தும் மிகவும் கவனமாக நேர்த்தியாக பயன்படுத்தப்படுவன. தற்காலத்தில் அரச சொத்துக்களும் எம்மிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணங்களிலிருந்து கட்டப்பட்டவையே என்ற எண்ணம் எமது மனதில் எழ வேண்டும். அப்போது தான் அவற்றின் மீது எமது கவனமுந் திரும்பும். இப்பொழுது போரின் பின்னர் பலவும் சும்மா கிடைக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து கிடைக்க மாட்டாஎன்பதை நாங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துளளார்.