மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளமையானது செயற்கைகோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் (Humar rights watch ) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 55 கிராமங்கள் புல்டோசர் கொண்டு அடியோடு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மியான்மரில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடிகளின்மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவத்தின் தீவிரம் அடைந்திருந்த நிலையில் சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் அங்கு ரோஹினிய முஸ்லிம் பெண்களை அந்நாட்டு ராணுவத்தினர்; திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தமை அங்கிருந்து தப்பி பங்களாதேசில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் உட்பட 29 பேரிடம் ஏபி செய்தி நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட நேர்காணலில் வெளிச்சத்துக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.