கேரள மாநிலத்தில் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட பழங்குடியின வாலிபரின் குடும்பத்தாருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் மது, (வயது 27). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார்.
வழக்கம்போல், கடந்த வியாழக்கிழமை மாலை கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றபோது திருடன் என நினைத்து அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுவை தாக்கியபோது செல்பி எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வைரலாகப் பரவிய நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில தலைமை செயலாளருக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் பிறப்பித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி ஏ.கே. பாலன், இந்த கோரப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.