குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை வலுவானதாக முன்னோக்கி நகர்த்த வேண்டுமாயின் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பாக கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யாது அமைச்சுப் பதவியில் மாற்றங்கள் செய்வதில் பயனில்லை என தெரிவித்துள்ள அவர் தனக்கு தலைமுறை ஒன்றை உருவாக்க முடியாத நபருக்கு எவ்வாறு கட்சியின் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியை வலுப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வரவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.