அம்பாறையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த பள்ளிவாசலும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் விடுதி ஒன்றுக்கு உணவருந்த சென்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் விடுதி உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதனைத் தொடர்ந்து இநத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
அங்கு திரண்டு வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர் குறித்த விடுதியையும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான பலசரக்கு கடையையும் தாக்கியுள்ளதுடன் பள்ளிவாசலினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த அல்குர்ஆன் பிரதிகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலில் தங்கியிருந்த சிலரும் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அம்பாறை நகரில் பெரும் பதற்றம் நிலவுவதுடன் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அச்சம் காரணமாக அம்பாறை நகரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதுடன் அங்குள்ள மாவட்ட கச்சேரி மற்றும் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.