Home இலங்கை வட மாகாண சமூக சேவைகள் அமைச்சரின் ஏற்பாட்டில் முல்லை மாவட்டத்தில் நடமாடும் சேவை :

வட மாகாண சமூக சேவைகள் அமைச்சரின் ஏற்பாட்டில் முல்லை மாவட்டத்தில் நடமாடும் சேவை :

by admin

வட மாகாண சமூக சேவைகள் அமைச்சரின் ஏற்பாட்டில் போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மாவட்டத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது. போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மக்களின் துயரினை போக்குவதற்கான முயற்சியாகவே இந்த சமூக சேவைகள் தொடர்பான நடமாடும் சேவயினை இங்கு நடாத்துவதற்கு தீர்மானித்து அதனடிப்படையில் இன்று நடாத்தியிருப்பதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மத்திய அரசின் தேசிய சமூக சேவைகள் திணைக்களம், அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவை கடந்த சனிக்கிழமை(24.02.2018) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வினை தலைமையேற்று நடத்திய அமைச்சர் மேலும் கூறுகையில்

இனவழிப்பு யுத்ததினால் முற்று முழுதான பாதிப்பிற்குள்ளாகியது இந்த முல்லைத்தீவு மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டம்தான் அதிகளவான கணவர்மாரை இழந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் யுத்தத்தினால் உடமைகளை இழந்து மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களையும் கொண்ட மாவட்டமாகும். அந்த வகையில் இங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே உங்கள் இடத்திற்கே வந்துள்ளோம்.

வட மாகாண சபையினூடாக நாங்கள் வழங்கும் சொற்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் எங்களது அலுவலகங்களை நோக்கி வரவேண்டியவர்களாக உள்ளீர்கள். அதனால் தான் உங்கள் சிரமங்களை ஓரளவுதன்னும் குறைக்காலாம் என்ற எண்ணத்தில் இந்த நடமாடும் சேவையை உங்கள் இடத்தில் நடாத்துவதற்காக தீர்மானித்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரது அயராத ஒத்துழைப்புடன் நடாத்தியிருக்கின்றோம்.

இந்த நடமாடும் சேவையின் மூலம் உங்களுக்கு தேவையான அளவு நண்மைகள் கிடைக்காது விடினும் ஓரளவு கணிசமான பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் இதனை ஏற்பாடு செய்து நடாத்தியிருக்கின்றோம். சமூக சேவை நோக்குடன் நாங்கள் முன்னெடுத்த இத்திட்டம் இன்று உங்களை நாடி வந்திருக்கின்றது. அந்த வகையில் நீங்கள் இங்கு கிடைக்கும் பயனைப்பெற்று உங்களுடைய வாழ்க்கையை ஓரளவேனும் மேம்படுத்துவதற்கோ அல்லது ஒரு சிறிய ஆறுதலைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்க வேண்டுமென்பதே எங்கள் அவா ஆகும்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருக்கும் தேசிய பணிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடனோ மாகாணங்களுடனோ எங்கள் மாவட்டங்களையும் மாகாணத்தையும் சமதன்மையுடையதாகக் கருதி நிதிகளை ஒதுக்குவதையோ அதனடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதே. போரினால் முற்றுமுழுதான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மாவட்டங்களாக கருதி விசேட கவனத்திற்குட்படுத்தி ஏனைய மாவட்டங்களுக்கு ஒதுக்குவதிலும்பார்க்க பல மடங்கு நிதியை ஒதுக்குவதன் ஊடாகத்தான் எமது மக்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் அனந்தி சசிதரன் ; மேலும் கூறியிருந்தார்.

இந்நிகழ்வில், மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திரு வஜிர கம்புறு ஹமகே மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் திரு சுமித்த சிங்கப் புலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தார்கள். இவர்களுடன், வட மாகாண விவசாய அமைச்சர்   க.சிவநேசன், வட மாகாண சுகாதார அமைச்சர்   ஞா.குணசீலன்,  வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வட மாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன், அமைச்சின் திணைக்கள பணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

மு.பகல் 9.00 மணி முதல் பி.பகல் 4.00 மணிவரை நடைபெற்றிருந்த இந்நடமாடும் சேவையில் முல்லைத்தீவு மாவட்டதை;தைச் சேர்ந்த 1250 பேர் வருகைதந்து பயன்பெற்றனர். அவர்களில் 593 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் உள்ளிட்ட உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டி முடிக்கப்பட்ட மலசலகூடத்திற்கான காசோலைகள் மற்றும் நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்பன வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More