குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த அநீதிகளை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.குகதாஸ் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது புதிதாக பதவியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான எஸ். குகநாதன் தனது முதல் உரையை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில் ,
போரின் இறுதிவரை போருக்குள் வாழ்ந்தவன், அந்தகாலத்தில் இலங்கை இராணுவம் மக்கள் மீதும், காயமடைந்தவர்கள் தங்கியிருந்த வைத்தியசாலைகள் மீதும் மிகமோசமான விமான குண்டு வீச்சு தாக்குதல்களையும் எறிகணை தாக்குதல்களையும் நடத்தி அப்பாவி மக்களையும், சிறுவர்களையும் படுகொலை செய்தனர்.
பாதுகாப்பு வலயங்கள் என சில பகுதிகளை அடையாளப்படுத்திய இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் தஞ்சம் புகுந்த நிலையில் அவற்றின் மீதும் மோசமான விமான குண்டு வீச்சுக்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், பச்சிளம் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்
போர் தீவரமடைய முன்னதாக சுமார் 5 லட்சம் மக்கள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து போர் வலயத்திற்குள் சிக்கிய நிலையில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் வரையிலானவர்களே போரிலிருந்து தப்பி வெளியே வந் த நிலையில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் போர் வரையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைமீட்டதாக கூறும் அரசாங்கம் போர் வலயத்திற்குள் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற மக்களை சுட்டு படுகொலை செய்த காட்சிகளை கண்டேன். அவற்றுக்கு நான் கண்கட்ட சாட்சி.
போர் வலயத்திற்குள்ளிருந்து வெளியே வந்த மக்களை சுமார் 5 நலன்புரி முகாம்களில் போட்டு அடைத்த இலங்கை அரசும் அதன் படைகளும் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை கூட உரிய முறையில் போதியளவில் வழங்கவில்லை.
அதனால் பல மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைகளுக்கு, அநீதிகளுக்கு நீதியும், பொறுப்புகூறலும் இடம்பெறவேண்டும். இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் செய்த பாதக செயலை தமிழ் மக்களால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. என தெரிவித்தார்.