முதல் முறையாக இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கர்நாடக அரசு வழங்குகின்றது. இயக்குநர் மணிரத்னம் பல்லவி அனு பல்லவி என்னும் கன்னடப் படத்தில் இருந்துதான் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
1983-ல் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். அனில்கபூர், லட்சுமி, கிரண் வைராலே ஆகியோர் நடித்திருந்தனர். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல படங்கள் செய்த மணிரத்னம் கன்னடத்தில் படங்கள் இயக்கவில்லை.
இந்தநிலையில் தற்பொழுது கர்நாடக அரசு மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருதினை அறிவித்துள்ளது. இந்த விருதினை கர்நாடக அரசும், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன. முதல் விருதே மணிரத்னத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை பெங்களூர் விதானசவுதாவில் முதலமைச்சர் சித்தராமய்யா இந்த விருதினை வழங்கவுள்ளார். 10 லட்சம் ரூபா பணத்துடன் விருதுப் பட்டயம் மற்றும் கேடயம் என்பன இந்த விருதுடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது