ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு இருப்பதாக கிரீன் பீஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011 இல்; ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது.
அத்துடன் அணு உலைக்குள் கடல் நீர் புகுந்ததால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்தமையினால் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, 6 அணு உலைகளில் 3 உலைகள் சேதமடைந்தன. இதையடுத்து அந்த உலைகளிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறத் தொடங்கியது. அப்பகுதியில் வசித்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணுஉலை விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் புகுஷிமா அணு உலையில் தற்போது கதிர் வீச்சு குறித்து சுற்றுச்சூழல் நிறுவனமான ‘கிரீன் பீஸ்’ அமைப்பு Nமுற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது. புகுஷிமா டாய்ச்சி அணு உலையை சுற்றி 10 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறும் உத்தரவு 2017ம் ஆண்டு தளர்த்தப்பட்ட போதும் சர்வதேச அளவில் அணுஉலையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், 100 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் என பல தரப்பினருக்கும் கதிர் வீச்சு அளவு சோதனை செய்யப்பட்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது கண்டிக்க தக்கது எனவும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
எனினும் கதிர் வீச்சு குறைந்த பகுதிகளில் மட்டுமே மக்கள் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.