குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதிகளை பெயரிடுவதற்கு கால அவகாசம் வழங்குமாறு அரசியல் கட்சிகளும், சுயாதீன குழுக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பதனை இன்றைய தினம் தீர்மானிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற சட்டத்திற்கு அமைய அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். உறுப்பினர்களை தெரிவு செய்யும் விகிதாசார கணக்கீட்டு முறையில் பிழைகள் இடம்பெற்றுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றமொன்றின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசியல் கட்சியொன்று 50 வீத உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டுமெனவும் அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், 170 உள்ளுராட்சி மன்றங்களில் இவ்வாறு 50 வீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.