இந்தியாவில் ஐ.என்.எக்ஸ் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு பாட்டியாலா இல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அண்மையில் இந்திய சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் கடந்த 6 நாட்களாக விசாரணைக்காவல் வைக்கப்பட்ட நிலையில் விசாரணை முடிவடைந்து இன்று பாட்டியாலா நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவருக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதன்போது 5நாள் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி ஒழிந்துள்ளதாகவும் கூறிய சி.பி.ஐ வழக்கறிஞர் தஷ்கர் மேஹ்தா அதிகாரிகளின் கேள்விக்கு கார்த்தி சரியான பதிலை அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன எனவே, கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 9 நாட்கள் நீதிமன்றம் கால அவகாசம் வழங்க வேண்டும் என தஷ்கர் மேஹ்தா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
அரசுத்தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை எப்படியாவது விசாரணைக் காவலில் அடைத்திட சி.பி.ஐ முயற்சிக்கிறது என்றும் அவர் விசாரணைக்கு தயாராகவே உள்ளார் என்றும் ஆனால், சி.பி.ஐ விரும்பும் வாக்குமூலத்தை கார்த்தி அளிக்கமாட்டார் எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாலை 5 மணியளவில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதியளித்தார். கார்த்தி சிதம்பரத்தின்பிணை மனு மீதான விசாரனை எதிர்வரும் 9ஆம் திகதி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் இத்துடன் மூன்றாவது தடவையாக கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ காவல் விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.