குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் முற்பகல் 10.00 மணியுடன் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இன்று மாலை 4.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என நேற்றைய தினம் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். எனினும், கடந்த 12 மணித்தியாலங்களில் கண்டியில் சுமூகமான சூழ்நிலை நிலவிய காரணத்தினால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மீளவும் மாலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
கண்டியில் இன்று மாலை வரையில் ஊரடங்கு அமுல்
கண்டியில் இன்றைய தினம் மாலை வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 4.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியைச் சேர்ந்த மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதனை தவிர்க்குமாறும், வீடுகளிலேயே இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மறு அறிவித்தல் வரையில் கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய, திகன பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் கடந்த சில தினங்களாக காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.