சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளமையை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று வியாழக்கிழமை வெளியேறுகிறது. அத்துடன் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் பதவிவிலகுகின்றனர்.
ஆந்திர மாநிலத்துக்கு அளித்த 19 வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மார்ச் 5ம் திகதிவரை தெலுங்குதேசம் விதித்த கெடு முடிவடைந்துள்ளது. இதனால் மத்திய கூட்டணி அரசில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.
இதன்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் பொறுப்பேற்றிருந்தது.
எனினும் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதனால் மார்ச் 5ம் திகதிக்குள், ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்கு தேசம் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது