முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச்; 08 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து இவர்கள் தமது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
கடந்த காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டும் யுத்தம் முடிவடையும் தறுவாயில் இராணுவத்திடம் ஒப்படைத்தும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது உறவுகள் எங்கே இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு என்ன இடம்பெற்றது என்ற முடிவு தெரியும் வரை தமது போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
தமது போரட்டத்துக்கான தீர்வினை சர்வதேசமே தர வேண்டும் எனவும் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் தமக்கான ஒரு உறுதியான தீர்வு பெற்றுத்தரப்படவேண்டும் எனவும் ஜெனீவாவுக்கான மகஜர் ஒன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்படுகின்றது
இந்தநிலையில் அவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்காண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.