ஐ.என்.எக்ஸ் ஊழல் தொடர்பான வழக்கில் அமுலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை நீக்கக்கோரி இந்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் புதல்வர் கார்த்தி சிதம்பரம் புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பில் கார்த்தி சிதம்பரம் நேரில் பிரசன்னமாகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை அழைப்பானை அனுப்பியிருந்தது. இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் கார்த்தியிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சார்பில தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், இந்திய குற்றத்தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற அழைப்பாணைகளை அமுலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது எனவும் இதனை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து , கார்த்தி சிதம்பரம் இந்த மனுவை புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தற்காலிக தீர்வை பெறலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து, அவர் புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவாக தாக்கல் செய்தார்.
கார்த்தி சிதம்பரம் தற்போது இதே வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணைக்காவலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது