சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய மக்கள் காங்கிரஸில் இட்பெற்ற வாக்களிப்பில் உயிர் வாழும்வரை ஜனாதிபதியாக இருக்கும் அரசியல் அமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு, 2964 மொத்த வாக்குகளில், 2,958 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். 2 வாக்குகள் எதிராகவும், 3 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், ஒரு வாக்கு செல்லுபடியற்றதாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதன் மூலம் ஒருவர் சீன அதிபராக இரண்டு முறைக்குமேல் பதவி வகிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன நாடாளுமன்றமான ‘தேசிய மக்கள் காங்கிரஸ்’ நீக்கியுள்ளது.இத்தீர்மானத்தின் மூலம் தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கு வழிவகை ஏற்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின்போது அடுத்த அதிபரின் பெயரை முன்மொழியும் நடைமுறையை தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் தவிர்த்தார். மாறாக, ஷி ஜின்பிங்கின் பெயரையும், கொள்கையையும் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யும் முடிவுக்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் தமது அரசியல் அதிகாரத்தை நிலைபெறச் செய்த ஷி, கட்சி நிறுவனரான மா சேதுங்குக்கு இணையான நிலைக்கு தம்மை உயர்திக்கொண்டார்.
ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அதிபருக்கான பதவிக்கால வரம்புகளை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. இந்நிலையில், இன்று கூடவுள்ள தேசிய மக்கள் காங்கிரசின் ஆண்டு கூட்டத்தின்போது எவ்வித சிரமமுமின்றி திருத்தமானது நிறைவேற்றப்பட்டுள்ளது.