ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்திய குற்றப் புலனாய்வுத்து துறையால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் புதல்வர் கார்த்தி சிதம்பரத்தை மார்சி 24 வரை நீதிமன்ற விசாரணைக் காவலில் வைக்க பாட்டியாலா இல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, கார்த்தி விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என வாதிட்ட குற்றப் புலனாய்வுத்துறை மேலும் 15 நாட்கள் விசாரணைக் காவலை நீட்டிக்க அனுமதி கேட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு, தனது பிணை மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்தது. மேலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள தமக்கு, சிறையில் தனக்கு தனி அறை வழங்க வேண்டும் எனவும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தியை வரும் 24ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேவேளை கடந்த 6ஆம் திகதி கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பிணை மனு 14ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.