170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.16 வயதிற்கு உட்பட்ட சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்ற சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்கும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 3 தடவைகள் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. விசாரணைகளின் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கேடுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
சந்தேகநருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட மா அதிபரால், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது நீதிபதி “எதிரி குற்றச்சாட்டுக்களை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். 3 குற்றங்களுக்கும் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். 15 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
Spread the love