குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹாசோன் பலகாய அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைப்பிரிவினர் இந்த அலுவலகத்தை சுற்றி வளைத்துள்ளனர். இந்த அலுவலகத்திலிருந்து பெருந்தொகையான பிரச்சார ஆவணங்கள், கணனிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊடகப் பேச்சாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உண்டு என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குண்டசாலையில் இந்த அலுவலகம் அமைந்திருந்தது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வீடுகள் கடைகள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக 445 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர், கடந்த 7ஆம் திகதியன்று பலர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள், கெங்கல்ல, கிம்புல்கொட, தம்புள்ளை, பங்கதெனிய, சிலாபம், ரஜவெல, பலாங்கொட மற்றும் முருத்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும், இவர்களுள் பாடசாலை மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களுள் முக்கியமானவரான விதான பதிரனகே அமித் ஜீவ வீரசிங்கவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, கண்டி- நத்தரம்பொத்தயில் உள்ள அவரது அலுவலகம், (மஹாசோன் பலகாய அலுவலகம்) நேற்று (13) அதிகாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்போது இன வன்முறைகளைக் தூண்டக் கூடிய பதாதைகள், சுவரொட்டிகள், கையேடுகள் உள்ளிட்ட 1,000க்கும் அதிகமானவை கைப்பற்றப்பட்டன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
“எனவே, கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தேகநபர்களது அலைபேசி உரையாடல்கள் என்பனவற்றை ஆராய விசேட தொழில்நுட்ப நிபுணர்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளன” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.