முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடவாது தடுப்பதற்கான செயற்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வலியுறுத்திக் கூறுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்தாலோசித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வன்செயல்கள் பற்றிய உரிய சான்றுகளை முன்வைப்பதற்கும் சேதங்கள் சரிவர மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்ச இழப்பீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது . அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவுடனும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் ஒன்றுகூடிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இவைபற்றி ஆராய்ந்துள்ளனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொழும்பில் இல்லாத நிலையில் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களின் பாரதூரம் பற்றியும் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழு, காலக்கெடு விதிப்பு என்பனவற்றின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் கூடி நிலைமையை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கு இணக்கம் காணப்பட்டது.