முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஸ்யாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளது. ரஸ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் சில ரஸ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் 2010-ம் ஆண்டு பிரித்தானியா அவரை மீட்டு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில் அவரும் அவரது மகளும் கடந்த வாரம் ஒரு வணிக வளாகத்தில் விசம் ஏற்றப்பட்டு மயங்கியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரஸ்யா மீது குற்றம் சுமத்திய பிரித்தானியா ரஸ்யா இது தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியது.
எனினும் பிரித்தானியாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்த ரஸ்யா எவ்வித விளத்தினையும் அளிக்கவில்லை. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விசம் ஏற்றப்பட்டமை தொடர்பில் ரஸ்ய அரசுதான் குற்றவாளி எனத் தெரிவித்து 23 ரஸ்ய தூதரக அதிகாரிகள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.