குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கண்டி பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து கடந்த 07ஆம் திகதி முதல் வைபர் , வட்ஸ்அப் , முகநூல் உள்ளிட்டவை இலங்கையில் உள்ள தொலைத்தொடர்பு வலையமைப்புக்கள் ஊடாக பார்க்க முடியாதவாறு முடக்கப்பட்டது.
அந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நண்பகல் முதல் முகநூல் மீதான தடையையும் நீக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அறிவுறுத்தி உள்ளார்.
அதேவேளை சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் ஜப்பானில் உள்ள இலங்கையர்களை சந்தித்த போது கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சமூக ஊடகங்களின் ஊடாக குரோத உணர்வைத் தூண்டும் செயற்பாடுகளை தடுக்க ஓர் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் சில பகுதிகளில் முகநூல் இன்னமும் செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
1 comment
Good news. Thank you chief.