குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி கட்டடத்தையும் கிணற்றையும் உடனடியாக கையளிப்பதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உறுதி தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நடேஸ்வரா கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றும் , பாடசாலை கிணற்றையும் காவல்துறையினர் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கமால் தம் வசம் வைத்துள்ளமை தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரிடம் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு அவர் ‘தாம் உடனடியாக இன்றைய தினமே பாடசாலை கட்டடத்தையும் கிணற்றையும் கையளிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி தந்துள்ளார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் 27 வருடங்களாக இருந்த காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீள கையளிக்கப்பட்டு தற்போது பாடசாலை இயங்கி வருகின்றது.
அந்நிலையில் , கடந்த இரண்டு வருட காலமாக பாடசாலை கட்டடம் ஒன்றும் கிணற்றையும் காவல்துறையினர் தம் வசம் வைத்துள்ளனதனால் மாணவர்கள் கிணற்றினை பாவிக்க முடியாததால் தண்ணீர் அருந்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
அது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது , ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் சபையில் சுட்டிக்காட்டி பேசினார். என்பது குறிப்பிடத்தக்கது