தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே தனியார் செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 147 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
இந்த செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த தனியார் செங்கற்சூளையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது, சத்தீஸ்கரைச் சேர்ந்த 63 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் 35 குழந்தைகள் என 147 பேர் கொத்தடிமைகளாக செங்கற்சூளையில் பணிபுரிந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 147 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிதி அளிக்கப்பட்டு, அவர்கள் சத்தீஸ்கர் மாநிலம் – ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கற்சூளை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.