மலையேற்ற பயிற்சி நிறுவனருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக காவல்துறையினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ம் திகதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் சென்ற 14 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களில் சிலரை, சென்னை டிரக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனம்தான் மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளது எனவும் வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டர் வான்கே என்பவர்தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் எனவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு மலையேற்ற பயிற்சி மேற்கொள்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், பீட்டர் வான்கே வெளிநாட்டுக்கு சென்று விட்டாரா அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர் அவர் இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.