ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் ஆப்பு வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை நடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருவதுடன் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். எனினும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் ஆப்பு’வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ரஜினிகாந்த் எத்தகைய கொள்கையுடன் இருக்கிறார் என்பது தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் தான் எந்த பக்கமும் சேரப் போவதில்லை எனவும் தனக்கு எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் ரஜினியின் ஆன்மிக அரசியலில் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
சினிமாவிலும் தனக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு எனவும் அவர் நடித்த படங்களில் தனக்கு உடன்பாடு கிடையாது எனவும் அத்தகைய பட வாய்ப்புகளை தான் ஏற்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளார் . அதுபோல தான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை எனவும் அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் தங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதனை தன்னால் உறுதியாக சொல்ல முடியும் எனவும் இந்த பிளவை நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
திரை உலகில் தானும் ரஜினியும் போட்டியாளர்களாகத் திகழ்ந்த போதும் தங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது எனவும் ஆனால் அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது எனவும் கமல் தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனவும் அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.