வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார்.
முன்னதாக புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டு வருவதுடன், நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதோ அல்லது தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதோ அவர்களுக்கு முக்கியமானதாக இல்லை எனத் தெரிவித்தார். நாட்டைப் பற்றி சிந்திக்காது அரசியல் அதிகாரம் பற்றி மட்டுமே சிந்திக்கும் அத்தகையவர்களை மக்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்மீது வைத்த நம்பிக்கையை தான் ஒருபோதும் மீறவில்லை என்றும், அக்கொள்கையை தான் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தபோதும் எதிர்காலத்திலும் அக்கொள்கையில் மாற்றங்களை செய்வதற்கு தான் தயாராக இல்லையென்றும் தெரிவித்தார்.