இலங்கையில் தொடர்நதும் நில அபகரிப்புகள் மேற்கொள்ளப்படுமாயின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது…
இலங்கையில் தொடர்நதும் நில அபகரிப்புகள் மேற்கொள்ளப்படுமாயின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளனது. சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கையை நேற்றையதினம் மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கேற் கில்மோர் சமர்ப்பித்திருந்தார்.
நிலைபேறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கையால் மிகக்குறைந்த அளவிலான முன்னேற்றமே பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பாகக் கவலையடைவதாகத் தெரிவித்த அவர், 30ஃ1 தீர்மானத்தின் கீழ், நிலைபேறுகால நீதிப் பொறிமுறைக்காக இலங்கை வழங்கிய அர்ப்பணிப்பு, குறிப்பிடத்தக்க முடிவுகளோ அல்லது பொது வெளியில் கிடைக்கும் சட்டமூல வரைவுகளோ இல்லாத நிலையில், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்காக, ஆணையாளர்கள் அண்மையிலேயே நியமிக்கப்பட்டனர் எனவும் அது குறித்த சட்டம் இயற்றப்பட்டு, 20 மாதங்கள் ஆகிவிட்டன எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டமும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமும், மோசமான அளவில் மீறப்பட்டுள்ளது எனவும், அவற்றுக்காகக் காணப்படும் சட்டவிலக்கீட்டை எதிர்கொள்வதற்கான விருப்பத்தையோ அல்லது திறனையோ, அதிகாரிகள் இன்னமும் வெளிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூகங்களுக்கு இடையில், கடந்தாண்டு இடம்பெற்ற வன்முறைகள், சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சு ஆகியன பற்றி, ஆழ்ந்த கவனத்தைக் கொண்டிருப்பதாகவும் சித்திரவதைகள் இன்னமும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன என தகவல்கள் கிடைப்பதாகவும் சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது