குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெற்றவர்கள் பிள்ளையை கட்டுக்கோப்புடன் வளர்க்க தவறின் நீதிமன்றம் அவர்களை மறியல் சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும் என யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆவா குழுவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் யாழ்.காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி. ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்திருந்தனர். குறித்த இளைஞர் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அந்நிலையில் , சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் குறித்த இளைஞரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்தார்.
அதனை அடுத்து அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் இளைஞர் பிணையில் செல்ல ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்ததை அடுத்து , சந்தேகபர் 50 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , 5 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.
அத்துடன் சந்தேக நபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யாழ்.காவல் நிலையத்தில் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் கையொப்பம் இட வேண்டும். கடவுசீட்டு இருந்தால் அதனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டு பயண தடை விதிக்கப்படுகின்றது. என தெரிவித்தார்.
அத்துடன் குறித்த கட்டளையை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.