கடந்த வருடம் முஸ்லிம் இறைச்சி வியாபாரி ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. 55 வயதான அலிமுதீன் அன்சாரி என்பவர் மாடுகளை hபரவூர்தியில் ஏற்றி அனுப்பியதற்காக அடித்து கொல்லப்பட்டிருந்தார்
கடந்த சில ஆண்டுகளாக பசு பாதுகாவலர் என்ற பெயரில் முஸ்லிம் இறைச்சி வியாபாரிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் முதல்முறையாக 11 பேருக்கு இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அன்சாரியின் கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் 12வது நபர் வயதுக்கு வராதவர் என்பதால், நீதிமன்றம் அவரை இந்த தீர்ப்பில் இருந்து விடுவித்துள்ளது.
இந்த தீர்ப்பால் தன்னுடைய குடும்பம் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்த அன்சாரியின் மகன் ஷாபான் அன்சாரி, மாநில அரசிடம் இருந்து எவ்வித இழப்பீடும் வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை தன்னுடைய கணவரின் இறப்பு சோகம் மிகுந்த இழப்பு என வெளியே செய்தியாளர்களிடம்தெரிவித்த அன்சாரியின் மனைவி மரியம் காட்டுன், மேலதிகமாக ரத்தம் சிந்தப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்
2014ம் ஆண்டு இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சஆட்சிக்கு வந்தது முதல் பசு பாதுகாப்பு குழுக்கள் என்ற பெயரில், மாட்டிறைச்சியை முக்கிய உணவாக உட்கொள்ளும் முஸ்லிம்கள் மற்றும் தலித்துக்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது