நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் எதுவும் நடந்துவிடாது என்றும் கறுப்புப் பணத்தில் படம் எடுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர்கள் சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிம்புவும் கலந்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான் என்று குறிப்பிட்ட சிம்பு கடவுள் புண்ணியத்தில் அதில் தானும் ஒருவர் எனக் கூறினார். பெரிய நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் எதுவும் நடக்காது என்றும் கூறினார். கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? என தயாரிப்பாளர்கள்மீது பாய்ந்தார் சிம்பு. அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்றும் அங்கு அவர் ஆவேசமாகப் பேசினார்.
நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் தான் பட்ஜெட் அதிகமாகிறது என்று சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், சிம்புவின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.