குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் ஆனந்தசங்கரி இன்று(22) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார் என்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு தெரிவான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமான நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரட்ணம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நோக்கத்திற்காக உதய சூரியன் சின்னத்தில் ஓரணியாக நாம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோமோ அதன் நோக்கத்திற்கு எதிராக அதுவும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் உப தலைவர் இவ்வாறு குறிப்பிடுவது, அவர் கிழக்கு மாகாணத்தில் யாருக்கோ விலைபோய்விட்டார் என்பதையே கோடிட்டு காட்டுகின்றது. அல்லது அவர் எதிர் காலத்தில் தனக்கு ஒரு பதவியை பெறுவதற்காக பிரதேச சபை உறுப்பினர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.
தேர்தலுக்கு முன்பு இதைனை அவர் கூறியிருந்தால் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் ; என்பதையும் ஒரு கணம் அவர் சிந்தித்து பார்க்கவேண்டும். தேர்தல் காலத்தில் ஒரு அறிக்கையும், தேர்தல் முடிந்த பின்னர் வேறு ஒரு அறிக்கையும் விடுத்து மக்களை வஞ்சித்து, ஏமாற்றுவது அவருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அது பொருந்தாது.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். மீறினால் அவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனையும் வலியுறுத்துகின்றோம். எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது